‘புரெவி’ புயலின் பெருமழையால் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று முன்தினம் 34 செமீ மழை பதிவானது. சிதம்பரம் பகுதி முழுவதும் வெள்ளக் காடானது.
சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபை, உள் பிரகாரம், வெளி பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. மேலும்,கோயில் குளமான சிவகங்கை குளம் நிரம்பி வழிந்தது.
10 - 13 நூற்றாண்டு காலம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரை வெளியேற்ற,கி.பி 10 - 13 நூற்றாண்டுக்குஇடையே பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1,200 மீட்டர் தூரத்துக்கு அப்பால் நீரை கொண்டு சென்றுவிடும் விதத்தில்வடிகால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கோயிலில் உள்ள யானைக்கால் மண்டபம் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வகையில் இதற்காக நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு
இந்த கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து, மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து, மேடான பகுதிநோக்கி நீர் செல்லும் கால்வாய்பண்டைய காலத்தில் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்பட்டதாக தகவல் இல்லை.
கால்வாய் ஒரு இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாகவும் என மாறி, மாறி, வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமானபகுதியில் இருந்து மேடானபகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.
நிலவறை கால்வாய் 1,250 மீட்டர் நீளம் கொண்டது. இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களி மண்ணைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர்.செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது என்று இதை ஆய்வு செய்த பொறியியல் வல்லுநர்கள், வரலாற்று பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்ற கால்வாய் அமைக்கும் திட்டம் சுமார் 5 ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பு மொஹஞ்சதாரோ, ஹரப்பா உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட, தேர்ந்த பண்டைய தொழில்நுட்பத்தை பராமரிக்காமல் விட்டதால்தான் தற்போதுபெய்த மழையில் நீர் வெளியேறாமல் கோயிலுக்குள் தேங்கியது என்கின்றனர் பக்தர்கள்.
இதற்கிடையே, கோயிலுக்கு வெளியில் வடக்கு வீதி பகுதியில் மின் மோட்டாரை வைத்து நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை கோயிலுக்குள் தேங்கியிருந்த வெள்ள நீரை இறைத்து வெளியேற்றினர்.