சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போதையில் கார் ஓட்டி வந்த நபர், கல்லூரி மாணவி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நேற்று காலை 8.40 மணியளவில், வகுப்பறைக்குச் செல்வதற்காக கல்லூரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார், தடுப்புக்கட்டையை இடித்து தள்ளிவிட்டு, நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த அதே கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் வாஹிதா (24) என்ற மாணவி மீது மோதியது. அதன் பின்னரும் தாறுமாறாக ஓடிய கார், ஒரு மரத்தில் மோதி நின்றது.
கார் மோதியதில் மாணவி வாஹிதாவின் கால்கள் உடைந்தன. மேலும் தலை, கை மற்றும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன. உடனே அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு, கல்லூரி மருத்துவமனையிலேயே சேர்த்தனர்.
தகவலறிந்த பெரும்புதூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். “காரை ஓட்டி வந்தவர் குணசேகரன். கார் ஓட்டுநரான இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காரில் அழைத்து வந்து விட்டுவிட்டு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. குணசேகரன் மது போதையில் காரைஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆள்மாறாட்டமா?
ஆனால், மாணவி மீது கார் மோதிய விதம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. குணசேகரன்தான் காரை ஓட்டி வந்தாரா அல்லது வேறு யாரையாவது தப்ப வைக்க விபத்தில் ஆள்மாறாட்டம் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர்தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் போதையில் இருந்ததாகவும் அந்தக் கல்லூரியிலேயே சில மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.