‘புரெவி’ புயலின் தாக்கத்தால், சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அதனால் தொடர்புடைய இடங்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள் மழைநீரில் மிதக்கின்றன.
வங்கக் கடலில் உருவான ‘புரெவி’ புயல் காரணமாக சென்னையில் கடந்த 2-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக டிஜிபி அலுவலகம் பகுதியில் 12 செமீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 11 செமீ, மாம்பலத்தில் 10 செமீ, சோழிங்கநல்லூரில் 8 செமீ, அயனாவரத்தில் 7 செமீ, பெரம்பூர், சென்னை ஆட்சியர் அலுவலகம், தண்டையார்பேட்டை, ஆலந்தூர் ஆகிய இடங்களில் 6 செமீ, எழும்பூரில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் காலை 6 மணிக்கு மேல் பல இடங்களில் மழை நீடித்து வந்தது.
கனமழை காரணமாக 13 இடங்களில் மரங்கள் விழுந்தன. அவற்றை மாநகராட்சி பணியாளர்கள், போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உடனுக்குடன் அகற்றினர். மேலும் வியாசர்பாடி கல்யாணபுரம், தண்டையார்பேட்டை நேதாஜி நகரின் சில பகுதிகள், புளியந்தோப்பு, அசோக்நகரின் சில பகுதிகள், வேளச்சேரியில் ராம்நகர் உள்ளிட்ட பல பகுதிகள், செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், ஆழ்வார்பேட்டையின் சில பகுதிகள், திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலை, வேப்பேரியில் உள்ள பல்வேறு சாலைகள், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் சில பகுதிகள், சாந்தோம் நெடுஞ்சாலை, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் 352 பேர் 4 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் மாநகராட்சி சார்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள நீரை வடியச் செய்துள்ளனர். இதர இடங்களில் மழைநீர் தேங்கி, அப்பகுதிகள் மிதந்து வருகின்றன. இதற்கு முன்பு, ஏற்பட்ட புயலின்போது சென்னையில் 58 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அவதி
தேங்கியுள்ள மழைநீரில் கழிவுநீரும் கலந்திருப்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட அவர்களால் வெளியில் செல்ல முடியவில்லை. இதனால் காய்கறி கடைகளில் விற்பனை குறைந்து, கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை நேற்று மந்தமாக இருந்தது. விலையும் குறைந்திருந்தது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “பல இடங்களில் மழைநீர் கால்வாய்கள் நிறைந்துள்ளன. அதில் நீர் குறைந்தால்தான், அப்பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்ற முடியும். அதனால் சில இடங்களில் மழைநீரை வடியவைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மாநகராட்சி சார்பில் 570 நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் வாரிய கழிவுநீர் உறிஞ்சும் லாரிகளும், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சிக்கு உதவி வருகின்றன. விரைவில் அனைத்து இடங்களிலும் மழைநீர் அகற்றப்படும்” என்றனர்.