ராமேசுவரம் நடராஜன்புரத்தில் மழை நீர் சூழ்ந்த வீட்டில் மெழுகுவர்த்தி உதவியுடன் சமையல் செய்யும் பெண். படம்: எல்.பாலச்சந்தர் 
தமிழகம்

புரெவி புயலால் 4-ம் நாளாக இருளில் மூழ்கிய ராமேசுவரம்: சீரமைக்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

செய்திப்பிரிவு

புரெவி புயல் வலுவிழந்ததால் ராமேசுவரம் தீவில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால், ராமேசுவரம் தீவில் நான்காவது நாளாக நேற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் ராமேசுவரம், தங் கச்சிமடம், பாம்பனில் வசித்து வரும் மக்கள் குடிநீர், அத்தியாவசியத் தேவைகளுக்கான தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான மக்கள் மழை நீரைப் பாத்திரங்களில் பிடித்து வைத்து அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர் மின்தடையால் மொபைல் போன்கள் செயல் இழந்தன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் பாடம் படிக்க முடியாமல் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர்.

நான்கு நாட்களாக நீடிக்கும் மின் தடையை சீர் செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையில் ராமேசுவரம் மின் வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் தாலுகா செயலாளர் சிவா தலைமையில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் மின் வாரியத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், புயல் காரணமாக மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலம் வழியாக ராமேசுவரம் வரும் மின் பாதையில் பழுது ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டறிந்து மின்தடை விரைவில் சீர் செய்யப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT