விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயப் பயிர்கள் திருகல் நோயால் அழுகி வருகின்றன.
புயல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காரியாபட்டி அருகே சித்தனேந்தல், மறைக் குளம், சொக்கனேந்தல், பெரிய ஆலங்குளம், தோப்பூர், முடுகன் குளம் ஆகிய கிராமங்களில் சுமார் நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயப் பயிர்கள் திருகல் நோயால் அழுகி வருகின்றன.
இதுகுறித்து சொக்கனேந் தலைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மழையால் வெங்காயப் பயிர்கள் முழுவதுமாக அழுகி திருகல் நோயால் பாதிக்கப் பட்டுள்ளன. நல்ல விளைச்சல் ஏற்பட்டு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டால் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். ஆனால், திருகல் நோயால் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் வாங்கிச் செலவு செய்த தொகை யைக்கூட எடுக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.