டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழிக்கல்வி சலுகை அடிப்படையில் அரசுப் பணிக்குத் தேர்வான 85 பேரின் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி 2019-ல் நடத்திய க்ரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகையை நேரடியாகத் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கு மட்டும் வழங்கக் கோரி மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், ''டிஎன்பிஎஸ்சி க்ரூப்-1 தேர்வில் 2016 முதல் 2019 வரை தமிழ் வழிக்கல்வி சலுகை அடிப்படையில் 85 பேர் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டுத் திருத்தச் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு மார்ச் மாதம் அனுப்பப்பட்டது. 8 மாதங்களாகத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை'' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கில் ஆளுநரின் செயலர், உள்துறைச் செயலரை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து, இருவரும் டிஎன்பிஎஸ்சி 20 சதவீத தமிழ் வழி இட ஒதுக்கீடு திருத்தச் சட்ட மசோதா ஒப்புதல் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும், தமிழ் வழிக்கல்வி சலுகையில் அரசுப் பணிக்குத் தேர்வான 85 பேரின் சான்றிதழ்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை டிச.9-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.