பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

போலி மருத்துவர்கள் கரோனா கிருமியைவிட ஆபத்தானவர்கள்: உயர் நீதிமன்றம் கருத்து

கி.மகாராஜன்

போலி மருத்துவர்கள் கரோனா கிருமியை விட ஆபத்தானவர்கள் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கரூர், அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் மருத்துவமனை நடத்தி வந்தார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளிப்பதாகக் கூறி போலீஸார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இவர் மீது 2018-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைத்ததை நீக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் ஜெயபாண்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரைப் போலீஸார் கைது செய்யாததற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து ஜெயபாண்டி கைது செய்யப்பட்டார்.

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுவைத் திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

''கரோனா தொற்றுக் காலத்தில் ஏராளமான அரசு மருத்துவர்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் மனுதாரர்களைப் போன்ற போலி மருத்துவர்களைப் பணி செய்ய அனுமதிப்பது கரோனா கிருமியை விட மிகவும் ஆபத்தானது. மனுதாரர் மீதான குற்ற வழக்கைக் கீழமை நீதிமன்றம் 15 வேலை நாட்களுக்கு மேல் ஒத்திவைக்காமல், தினமும் விசாரித்து முடிக்க வேண்டும்.

போலி நபர்களின் அடையாளம் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. எந்தக் காலக்கட்டத்திலும் மக்கள் சிகிச்சைக்குச் செல்லாமல் இருப்பதற்காக மனுதாரரின் புகைப்படத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மனுதாரரின் மருத்துவமனைக்கு சீல் வைத்ததில் தலையிட முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT