கடந்த சில வாரங்களாக நாம் அதிகம் கேட்கும், பார்க்கும், உச்சரிக்கும் வார்த்தைகள் புயல்.. கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு... மக்கள் அவதி என்பதாகவே இருக்கின்றன. தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொள்ளும் இயற்கை, புயல், மழை, வெள்ளம் என்ற இயல்புச் சங்கிலியிலும் மாற்றத்தைக் காண்பித்து வருகிறது..
கடலில் புயல் ஏற்படுவது இயற்கைதான் என்றாலும் தற்போது உருவாகும் புயல்களின் எண்ணிக்கையும் அவற்றின் தீவிரமும் அதிகரித்துக்கொண்டே வருவது சூழலியாளர்களைக் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்பு வரை அபூர்வமாய் ஏற்பட்ட புயல், இப்போது ஆண்டுதோறும் ஒரு புயல் என மாற்றிக்கொண்டு விட்டது.
2010-ல் ஜல், 2011-ல் தானே, 2016-ல் வர்தா, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒக்கி, கஜா, 2020-ல் நிவர், புரெவி எனத் தொடர்ச்சியான புயல்கள் தமிழகத்தைச் சுழற்றி அடிக்கின்றன.
இதற்குக் காலநிலை மாற்றம் முக்கியமான, பிரதானக் காரணம் என்கிறார் ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இதுகுறித்து அவர் விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
’’பொதுவாகக் கடலில் புயல்கள் உருவாக முக்கியக் காரணங்கள் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம். மனிதர்கள் பசுமை இல்ல வாயுக்களை எரித்து வெளியிடக்கூடிய கார்பனைப் பெருங்கடல்கள் கிரகித்துக் கொள்கின்றன. இதனால் கடல் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த அதிகரிப்பால், அதிலுள்ள நீர் ஆவியாகி மேலே செல்கிறது. இதனால் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இவற்றால் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, புயலாக மாறுகிறது.
புயல்கள் உருவாகக் காலநிலை மாற்றத்துக்கு நேரடித் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டாலும் புயல்களின் தீவிரத்தன்மை, அவற்றின் எண்ணிக்கைகள் அதிகரிப்பு மற்றும் கணிக்க முடியாத தன்மைக்குக் காலநிலை மாற்றமே முக்கியக் காரணம். உதாரணத்துடன் விளக்கினால், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் வழக்கமாக 4 முதல் 7 நாட்களுக்குள் கரையைக் கடந்துவிடும். ஆனால் ஃபானே புயல் 11 நாட்களை எடுத்துக் கொண்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருமாற 40 மணி நேரம் ஆகும். ஆனால் ஒக்கி புயல் வெறும் 6 முதல் 9 மணி நேரத்தில் புயலாக மாறியது நினைவிருக்கலாம்.
காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் இயற்கைக்கு எதிரான செயல்கள் அங்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. பல்வேறு இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள், அவற்றோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. பேரிடர், பாதிப்பு, நிவாரணம், புயலுக்குப் பிந்தைய வறட்சி, அதற்கான நிவாரணம் எனத் தொடர் சங்கிலியாகச் சென்று கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
உண்மையில் சுற்றுச்சூழலால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. சூழலைப் பாதுகாப்பதன் மூலமே நீடித்த, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்’’ என்று சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தால் நீரியல் சுழற்சியில் ஏற்படும் இடையூறே புயல்களின் தீவிரத்தன்மைக்குக் காரணம் என்கிறார் நீரியல் துறை பேராசிரியர் ஜனகராஜன்.
அவர் மேலும் கூறும்போது, ’’நீரியல் சுழற்சி (நிலத்தில் இருந்து தண்ணீர் கடலுக்குச் சென்று, நீராவியாக மாறி, மழையாக மீண்டும் நிலத்தை அடையும் தொடர்ச்சியான நிகழ்வு) தொடர்ந்து சீராக நடக்கும் வரையில் வட கிழக்குப் பருவமழை, தென் மேற்குப் பருவமழை, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புயல் என்பது வழக்கமாக இருந்தது. அதில் இடையூறு ஏற்படும்போதுதான் திடீர் புயல், வெயில், குறைவான நேரத்தில் பெருமழை, வரலாறு காணாத வறட்சி ஏற்படுகிறது. இவையனைத்தும் முன்பே ஏற்பட்டிருந்தாலும் அதன் தீவிரம் தற்போதுதான் அதிகரித்து வருகிறது.
பூமியின் வெப்பநிலை உயர்வாலும் லட்சக்கணக்கான ஏக்கர் காடுகளை அழிப்பதாலும் நீரியல் சுழற்சியில் இடையூறு ஏற்படுகிறது.
கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, தொழிற்சாலை வாயுக்கள் வெளியேற்றம் ஆகியவற்றால் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தண்ணீர் நீராவியாகும் அளவு அதிகரித்து, அதன் காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிதீவிர மழையும், சில இடங்களில் பனிப்பொழிவும் புதிய இயல்பாக மாறலாம். அதேநேரத்தில், கடற்கரையைத் தவிர்த்த பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வறட்சி ஏற்படவும் சாத்தியமுள்ளது’’ என்று தெரிவித்தார்.
ஆய்வாளர் சுஜாதா பைரவன், காலநிலை மாற்றம்
’’வழக்கமாகப் புயல் ஒரே இடத்தில் நிலைகொண்டு இன்னும் வலிமை பெற்றதாக உருமாறும். ஆனால் கடந்த மாதத்தில் உருவான நிவர் புயல் புதன்கிழமை கரையைக் கடக்கும், வியாழக்கிழமை காலையில், மாலையில் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டு என நள்ளிரவில் வலிமை பெற்ற புயலாக மாறி கரையைக் கடந்தது. இதற்கு முக்கியக் காரணம் வெப்பநிலை உயர்வே. இந்த உயர்வு கடல் நீரோட்டங்கள், ஆற்றல் சுழற்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் புயல்கள் ஏற்படுகின்றன.
புயலுக்குப் பிறகான வறட்சி
காலநிலை மாற்றம் பருவ மழைப் பொழிவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிடுகிறது. அதைச் சேமித்து வைக்க நாம் முறையான வசதிகளை மேற்கொள்ளாததால் அனைத்து நீரும் வீணாகி விடுகிறது. மீண்டும் பருவ மழை பெய்யாது என்பதால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, வறட்சி சூழல் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.’’
மேலும் இவற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து சுஜாதா பைரவன் கூறும்போது, ’’மழைநீர் சேகரிப்பு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாரல் ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும். அதேபோல உரங்கள் தவிர்த்த இயற்கை விவசாயத்தை (natural farming- உரங்கள் தவிர்த்து ஒரே நிலத்தில் மரங்கள், பயிர்கள், காய்கறிகள் பயிரிடப்படும் முறை)நோக்கி மக்கள் நகர அரசு ஊக்குவிக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்திற்கான தேசிய, மாநிலச் செயல் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றைத் தனியாக மேற்கொள்ளாமல், பொதுவான வளர்ச்சித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்துச் செய்ய வேண்டும். அரசுகள் புறம்போக்கு நிலங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. பதிலாக அந்த நிலங்களில் நகர்ப்புற விவசாயம், காய்கறி பயிரிடல், மியாவாக்கி வன உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
இவற்றை வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் நீட்டித்து கடற்கரை வரை ஒருங்கிணைத்து, பசுமை மண்டலமாக உருவாக்கலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பும் உருவாகும். கரியமில வாயு வெளியேற்றப்படுவதும் குறையும். இவற்றில் தமிழகத்தைக் காட்டிலும் மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.
இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் வேறு வகையில் நமக்கே திரும்பி வரும். இந்தப் புயல்களையும் அதற்கான எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு இனியாவது மானுட சமூகம் விழித்துக்கொள்வது நமக்கு நல்லது, இயற்கைக்கும் அவசியமானது.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in