கடலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக பெய்துவரும் தொடர்மழையால் பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் இடையேயான சாலை குண்டும் குழியுமாக பல்லாங்குழி போல் காட்சியளிப்பதால் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 தினங்களாக தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியும், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தும் ஓடுகிறது. இதனால் சாலைகள் மிகுந்த சேதமடைந்துள்ளது. அந்த வகையில், பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலை அகலப்படுத்தும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வருகிறது. ஆனால், இதுவரை பணிகள் முடிந்த பாடில்லை. சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகள் முன்னிலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் சாலை குண்டும் குழியுமாக மாறி பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.