தமிழ் கல்வெட்டுகளுக்கான இயக்குநரகத்தை சென்னையில் அமைத்திட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச. 05) வெளியிட்ட அறிக்கை:
"இந்திய நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் 40 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளாகும். மொழி, வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்வதில் கல்வெட்டுகள் மிக முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கை உள்ள தமிழ் கல்வெட்டுகளின் படிகளை பாதுகாக்கும் பணியை மைசூருவில் உள்ள கல்வெட்டுத்துறை இயக்குநரக அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் மைசூருக்கு சென்று தான் கல்வெட்டு படிகளை பார்வையிட முடியும் அல்லது மைசூருவில் உள்ள அலுவலகத்திற்கு எழுதி அந்த படிகளை பெற்று தங்களது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், பல நேரங்களில் அக்கல்வெட்டு படிகளை பெற முடியாத அல்லது மிகத் தாமதமாக பெறும் நிலைமை உள்ளதால், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
ஏற்கெனவே இந்த இயக்குநரகம் ஊட்டியில் செயல்பட்டு வந்தது. பின்னர் அது மைசூருவுக்கு மாற்றப்பட்டுள்ளதால் இந்த சிரமம் ஏற்படுகிறது".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.