கோவை அரசு மருத்துவமனை கதிரியக்க சிகிச்சை துறையில் நிபுணத்துவம் இல்லாத மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மண்டல புற்றுநோய் மையமாக செயல்பட்டு வரும் கோவை அரசு மருத்துவமனையில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு உடலின் மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் துல்லியமாக கதிர்வீச்சு செலுத்தி சிகிச்சை அளிக்க பயன்படும் 'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' என்ற நவீன இயந்திரம் ரூ.25 கோடி செலவில் நிறுவப்பட்டு, கடந்த ஜூலை மாத முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' இயந்திரத்தின் மூலம் தொடக்க நிலையில் புற்றுநோயை கண்டறிந்தால் குணப்படுத்தலாம். அந்தவகையில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் போன்றவற்றுக்கு இந்த இயந்திரம் மூலம் தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளிக்கலாம். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் ரூ.1.50 லட்சம் வரை செலவாகும் என்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால், கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் வேறுதுறை சார்ந்த மருத்துவர்களை நியமித்துள்ளதால் நவீன இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
துறையில் 8 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 5 பேரில் 2 பேர் மட்டும் கதிரியக்க சிகிச்சைத்துறை சார்ந்த மருத்துவர்கள். மீதமுள்ள 3 பேர் வேறு மருத்துவ துறைகளைச் சேர்ந்தவர்கள். இதனால், புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு இரு மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இது தொடர்பாக புற்றுநோயாளிகள் சிலர் கூறும்போது, "நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் பற்றாக்குறையால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய சிகிச்சை தள்ளிப்போகிறது. காத்திருப்போர் பட்டியலில் நிறையபேர் உள்ளனர். அறுவை சிகிச்சை செய்வதுபோல் குறிப்பிட்ட நாளில் நோயாளிகளை வரச்சொல்கின்றனர். ஒருமாதம் வரை சிகிச்சை தாமதமாகிறது. இரு மருத்துவர்களால் அனைவர் மீதும் தனிக்கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், நவீன சிகிச்சை வசதிகள் இருந்தும் சிகிச்சையின் தரம் குறைகிறது" என்றனர்.
இதேபோல, பொதுமருத்துவ துறை, எலும்பு மருத்துவ துறையிலும் சம்மந்தமில்லாத மருத்துவர்கள் நியமிக்கப்ப்டடுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், போதிய மருத்துவர்கள் இல்லாமல் திண்டாடும் நிலை உள்ளது. கோவை அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல் பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதேநிலை உள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நேர்மையான கலந்தாய்வு தேவை
அரசு மருத்துவர்கள் சிலர் கூறும்போது, "சில அரசு மருத்துவர்கள் சுயநலத்துக்காக அதிகாரத்தை பயன்படுத்தி இடம் மாறுதலாகி தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு வருகின்றனர். இடம்மாறுதலுக்காக தங்களுக்கு சம்மந்தமில்லாத வேறு துறைகளில் அந்த மருத்துவர்கள் நியமிக்கப்படும்போது, கடைசியில் பாதிக்கப்படுவது நோயாளிகள்தான். எனவே, நேர்மையாக கலந்தாய்வு நடத்தி துறை சார்ந்த நிபுணர்களை மட்டுமே அந்தந்த துறைகளில் நியமிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
மருத்துவக் கல்வி இயக்குநருக்கு கடிதம்
கோவை அரசு மருத்துவமனையின் டீன் காளிதாஸ் கூறும்போது, "கதிரியக்க சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்களை அந்த துறையில் நியமிக்கக்கோரி மருத்துவக் கல்வி இயக்குநருக்கு (டிஎம்இ) கடிதம் அனுப்பியுள்ளோம். புற்றுநோயின் தீவிரத்தின் அடிப்படையில் நோயாளிகளை வகைப்படுத்தி, தற்போதுள்ள மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசரமாக சிகிச்சை தேவைப்படுவோருக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற துறைகளில் போதுமான அளவு மருத்துவர்கள் உள்ளனர்" என்றனர்.