வட கிழக்கு பருவமழை 25-ம் தேதிக்கு மேல்தான் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இப்போது இல்லாததால் மேலும் 5 நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கடலோர ஆந்திரம், ராயலசீமா, கேரளம், கர்நாடகத்தின் உள் மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் ஆண்டு சராசரி மழை அளவில் 30 சதவீதம் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் கிடைக்கும். தமிழகத்துக்கு இன்னும் கூடுதலாக ஆண்டு மழை அளவில் 48 சதவீதம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் 60 சதவீத மழை பெய்யும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, ‘‘அக்டோபர் மாதத்தில் ஆந்திரம் - தமிழக கடலோரத்தில் பெய்ய ஆரம்பிக்கும் மழையைத்தான் வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் என்று கூறுகிறோம். வடகிழக்கு பருவமழை வழக்கமாக 20-ம் தேதி வாக்கில் தொடங்கும்.
ஆனாலும் ஒரு வாரம் முன்போ அல்லது பின்பாகவோ தொடங்கினாலும் அது வழக்கமான தொடக்கமாகத்தான் கருதப்படும். வட கிழக்கு பருவமழை மிகவும் தாமதமாக அக்டோபர் 29-ம் தேதி தொடங்கியதும் உண்டு. தற்போது ஆந்திர - தமிழக கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை, மழை எதுவும் இல்லாததால் 25-ம் தேதிக்கு பிறகே பருவமழை தொடங்கும்’’ என்றார்.
12% அதிகமாக இருக்கும்
தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழையின்போது பொதுவாக 43.8 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக 12 சதவீதம் கிடைக்கக் கூடும் என்றும் அதற்கான 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் வடகிழக்கு பருவ மழையை கணக்கிட்டால் 2004 முதல் 2011 வரை வழக்கத்தைவிட அதிகமாகத்தான் பெய்துள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பற்றாக்குறையாகவே மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.