சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக பொதுக்குழு விரைவில் கூடுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்,மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும், நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட கட்சி நடவடிக்கைகளையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பது, புதிய நிர்வாகிகள் நியமனம், வாக்குச்சாவடி சிறப்புக் குழு அமைப்பது உள்ளிட்ட பணிகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையிலான மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க கட்சியின் பொதுக்குழுவை விரைவில் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த மாதம் இறுதிக்குள் தேமுதிக பொதுக்குழு கூடுகிறது.
தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும்.
முந்தைய தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட தாமதம், குழப்பங்கள் இந்த முறை இருக்கக் கூடாது என கட்சித் தலைமையிடம் வலியுறுத்த உள்ளோம்.
திரைத்துறையில் நடிகர்கள் ரஜினிகாந்தும் விஜயகாந்தும் நீண்டகாலம் நண்பர்களாக இருந்து வருகின்றனர். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம், கூட்டணி நிலைப்பாடு குறித்தும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்’’ என்றனர்.