சேலம் மாநகரம், ஐந்து ரோட்டில் காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா பொருத்தி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் மாநகர காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சேலம் நான்கு ரோடு, சாரதா கல்லூரி சாலை, ஜங்ஷன் சாலை மற்றும் ஈரடுக்கு மேம்பாலங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் போக்குவரத்து விதி முறை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு, உடனடியாக குறுந்தகவல் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையை நேற்று மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார். இதில் மாநகர துணை காவல் ஆணையர்கள் செந்தில், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் கூறும்போது, ‘சேலம் ஜங்ஷன் சந்திப்பில் இன்று (4-ம் தேதி) முதல் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது தானியங்கி கேமரா மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. ஐந்து ரோடு சந்திப்பு பகுதியில் மொத்தம் 24 தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு, என்ஐசி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஐந்து ரோடு பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் வாகன விதி மீறல்களில் ஈடுபடும் பட்சத்தில், ஹெல்மெட் அணியாமல், இரண்டு சக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.
தானியங்கி கேமரா படம் பிடித்து, ஆதாரத்துடன் தொடர்புடைய வாகன ஓட்டிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவலுடன், அபராத தொகை அனுப்பி வைக்கப்படும். விதிகளை மீறுபவர்கள் ஆன்-லைன் மூலம் அபராத தொகையை செலுத்த வேண்டும். தவறினால், வாகனங்களுக்கான புதுப் பித்தல், இன்சூரன்ஸ் புதுப் பித்தல் உள்ளிட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்படும். எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’ என்றார்.