தமிழகம்

தனியார் மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தில் தலையிட முடியாது: வழக்கை முடித்து நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில்தான் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் கூறியது.

நெல்லையைச் சேர்ந்த கிரகாம்பெல், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவக் கல்லூரி பயில வாய்ப்புக் கிடைத்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்த வழியில்லாமல் படிப்பை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தைக் குறைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்து.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளை வைத்தே கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி தனியார் மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. வழக்கு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT