சொத்து பிரச்சினை காரணமாக தந்தையே அடியாட்களை ஏவி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகள் - மகன் ஆகியோர் நேற்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரியநேரி ஊராட்சியைச் சேர்ந்த சீனிவாசன் (29) என்பவர், தனது சகோதரி லாவண்யா (32)-வுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். அப்போது, தனது புகார் மனு மீது கந்திலி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறி திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி சீனிவாசனும் அவரது சகோதரியும் தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சீனிவாசனின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். பிறகு, ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
பிறகு, 2 பேரையும் அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவ லறிந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, காவல் துறையினரிடம் சீனிவாசன், லாவண்யா ஆகியோர் கூறியதாவது:
எங்கள் தந்தை முனுசாமி (66) என்பவர் 2-வது திருமணம் செய்து கொண்டு எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக்கொடுக்காமல் பல ஆண்டுகளாக காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அடியாட்களை கொண்டு எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் நாங்கள் அளித்த புகார் மனு மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை.
எனவே, சொத்து பிரச்சினை காரணமாக பெற்ற பிள்ளைகளை ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த எங்கள் தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சி செய்ததாக’’ தெரிவித்தனர். இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.