மழை பெய்யும் நாட்களில் சில மணி நேரங்கள் மட்டுமே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த இரண்டு ஓடைகளை ஒருங்கிணைத்து ‘பாரதியார் தடுப்பணை’ யைக் கட்டியிருக்கிறது கோவை பாரதியார் பல்கலைக்கழகம்.
இதன் மூலம் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் வரை 22 லட்சம் லிட்டர் தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந்ததுடன், அந்தப் பகுதியின் வனவிலங்குகளுக்கு குடிநீர் ஆதார மாகவும் விளங்குகிறது பாரதியார் தடுப்பணை.
மருதமலை அருகே அமைந்தி ருக்கிறது கோவை பாரதியார் பல் கலைக்கழகம். வனங்கள் சூழ்ந்த பகுதி இது. இங்கு யானை, கரடி, காட்டுப் பன்றி, காட்டு மாடு, மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. ஆனாலும், இவற் றால் பல்கலைக்கழகத்துக்கு பெரி யளவில் தொந்தரவு கிடையாது.
அதேநேரம், இத்தனைக் கால மாக இந்த வனவிலங்குகளுக்கு பல்கலைக்கழகம் அருகே குடிநீர் ஆதாரம் எதுவும் இருந்ததில்லை. இதனால், யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அருகிலுள்ள மக்கள் வாழிடங்களுக்கு சென்று சேதம் விளைவித்துக்கொண்டிருந்தன.
இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக் கழக வளாகத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
தடுப்பணை கட்டுவதில் முக்கிய பங்கு வகித்த பாரதியார் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் அ.மணிமேகலன் ‘தி இந்து’விடம் கூறுகையில், “மருதமலையிலிருந்து ஆனைப்பள்ளம் என்கிற பெரிய ஓடை ஒன்றும், பெயர் இல்லாத சிறிய ஓடை ஒன்றும் பல்கலைக்கழக வளாகம் வழியாக ஓடி, வீரகேரளம் பகுதி அருகே கிருஷ்ணாம்பதி ஏரி, செல்வாம்பதி ஏரி, குமாரசாமி ஏரி, நரசாம்பாதி ஏரி ஆகிய ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி, இறுதியில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. ஆனால், மழை வரும் நாட்களில் சில மணி நேரம் மட்டுமே இந்த ஓடைகளில் தண்ணீர் ஓடும்.
இந்த நிலையில்தான் சில மாதங் களுக்கு முன்பு பல்கலைக்கழகத் தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஜேம்ஸ் பிச்சை வழி காட்டுதலின்படி பல்கலைக்கழக வளாகத்தில் தடுப்பணையைக் கட்டும் திட்டம் தீட்டப்பட்டது. இதற் கான பணிகளை பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை மேற்கொண்டது. தடுப்பணையின் கட்டுமானச் செலவுகளை கோவையைச் சேர்ந்த விஜயலட்சுமி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.
இந்த இரு ஓடைகளும் பல் கலைக்கழக வளாகத்தில் இணை யும் இடத்தில் இயற்கையான பள்ளம் இருந்தது. அதனை மேலும் ஆழப்படுத்தினோம். இறுதியாக 190 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம், 15 மீட்டர் ஆழம் கொண்ட தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது. இதில் 22 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடிகிறது.
தவிர, பல்கலைக்கழக வளாகத் தில் பெய்யும் மொத்த மழைநீரும் இந்த தடுப்பணைக்குச் சென்று சேரும் வகையில் வளாகம் முழுவதும் பூமிக்குள் குழாய்கள் பதித்தோம். இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. மழைக் காலம் தொடங்கியது முதல் கடந்த 3 மாதங்களாக இந்த தடுப்பணையில் நிரந்தரமாக சுமார் 10 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் சுமார் 6 மாதங்கள் வரை தேங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பணையைச் சுற்றிலும் வனத்துறை உதவியுடன் புன்னை, அத்தி, நீர் மத்தி, ஆலம், நாவல், மூங்கில் உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விலங்கியல் துறை சார்பில் கட்லா, ரோகு, மிருகால் ரக 60,000 மீன் குஞ்சுகள் தடுப்பணையில் விட்டு வளர்க்கப்படுகின்றன. யானை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அணையின் ஒருபக்கத்தில் சரிவான பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தினசரி இரவுகளில் வன விலங்குகள் தண்ணீர் குடித்து விட்டு சென்றதற்கான காலடித் தடங்கள் காணப்படுகின்றன.
இந்த தடுப்பணை பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல், விலங்கியல், தாவரவியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறை மாணவர்களின் ஆய்வுகளுக்கும் பெரிதும் உதவுகிறது.
மேலும், தடுப்பணையில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் தண்ணீர் நிற்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந் துள்ளது.” என்றார்.
ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அழிந்து வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத் தின் முயற்சி பாராட்டுக்குரிய தாகும்.