ஏரி உடைப்பைச் சரிசெய்த விவசாயிகள். 
தமிழகம்

திட்டக்குடி அருகே ஏரி உடைப்பைச் சரிசெய்த விவசாயிகள்

ந.முருகவேல்

அண்மையில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் சரிசெய்யப்பட்ட ஏரியில் ஏற்பட்ட உடைப்பை விவசாயிகளே சரிசெய்த சம்பவம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாகப் பெய்துவரும் மழையால் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதன்படி, திட்டக்குடி அருகே சமீபத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டதாதக் கூறப்படும் ஏரியில் மழைநீர் நிரம்பியுள்ளது. மழைநீர் நிரம்பிய நிலையில் இன்று (டிச.4) அதிகாலை ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, நீர் விளைநிலத்திற்குள் புகுந்தது. இதையறிந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, ஏரியில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்தனர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், "திட்டக்குடி அடுத்துள்ள கோடங்குடி கிராமத்தில் அண்மையில் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் சர்வே எண் 77-ல் 144.5 பரப்பளவில் ஏரியைத் தூர்வார அரசு ரூ.16.5 லட்சம் நிதி ஒதுக்கியது.

ஏரியைப் புனரமைப்பு மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் அதைச் சரிவர சீரமைக்கவில்லை. இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரியின் கரை சரியான முறையில் அமைக்கப்படாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் ஏரியில் கரை உடைந்து விளைநிலங்களுக்குள் தண்ணீர் தாறுமாறாக ஓடியது.

எங்களுக்காக வெட்டப்பட்ட ஏரியில் சரியான முறையில் கரையைச் சீரமைக்காததால் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT