தேர்தல் வாக்குறுதி, சட்டப்பேரவை அறிவிப்புகளை நிறைவேற்றாத புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று காலை தொடங்கி திங்கள்கிழமை காலை வரை 72 மணி நேர தொடர் போராட்டத்தை பாஜக தொடங்கியது.
புதுச்சேரி அண்ணாசிலை அருகே இன்று (டிச. 04) காலை 10 மணிக்கு மழையோடு போராட்டத்தை பாஜக தொடங்கியது. போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
போராட்டத்தில் சாமிநாதன் பேசுகையில், "ஐதராபாத் மாநகராட்சியை பாஜக கைப்பற்ற உள்ளது. கடந்த காலத்தில் ஐதராபாத்தில் 2 சதவீத வாக்குதான் பாஜக பெற்றது. ஆனால், இன்று வாக்கு சதவீதம் 40 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, தமிழகம், புதுவையில் பாஜக வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த காலத்தைக் கணக்கில்கொண்டு காங்கிரஸார் ஏதேதோ பேசி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 50-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, 30 கிலோ இலவச அரிசி, 100 யூனிட் மின்சாரம் இலவசம், தகவல் தொழில்நுட்ப பூங்கா, தனியார் மருத்துவக் கல்லூரியில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு உள்ளிட்ட பல அறிவிப்புகளை அறிவித்தனர். இதில், ஏழைகள் பயன்பெறக்கூடிய இலவச அரிசியைக்கூட 40 மாதங்களாக காங்கிரஸ் அரசு வழங்கவில்லை.
நாள்தோறும் நாராயணசாமி புதிய பொய்களை அறிவிப்புகளாக வெளியிட்டு வருகிறார். முக்கிய ஆலைகள் அனைத்தையும் பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் நாராயணசாமி மூடியுள்ளார். இது மூடுவிழா அரசு. வீட்டுவரி, சாலைவரி, சொத்துவரி, மின்கட்டணம், குப்பை வரி என அனைத்தையும் உயர்த்தியுள்ளார். சுடுகாட்டில்கூட கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.
மழை பொழிவின்போதும் இப்போராட்டம் தொடர்ந்து 72 மணி நேரம் நடத்த உள்ளோம் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.