புரெவி புயல் எதிரொலியாக கன்னியாகுமரி கடல் 3 நாட்களாக தொடர்ச்சியாக உள்வாங்கி வருகிறது. புயல் பேரிடர் அச்சத்தால் குமரி கடற்கரை கிராமங்கள் அனைத்தும் இன்றும வெறிச்சோடின.
புரெவி புயல் எச்செரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் 4-வது நாளாக அனைத்துத்துறை சார்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
புயல் வலுவிழந்த தகவல் கிடைத்த பின்னரும் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களிலும் பொதுமக்கள் செல்வதற்கான தடை நீடித்தது.
கடற்கரைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு மெரைன் போலீஸார், மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், போலீஸார் ஆகியோர் கண்காணித்தனர். விசைப்படகுகள், மற்றும் நாட்டுப்படகுகள் எதுவும் மீன்பிடிக்க செல்லவில்லை. முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக தங்கு தளங்களிலேயே படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் மீனவ கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டம் முழுவதும் இன்று மேகமூட்டத்துடன் இருள்சூழ்ந்த தட்பவெப்பம் நிலவியது. மதியத்திற்கு பின்னர் பரவலாக சாரல் மழை பொழிந்தது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 2-ம் தேதியில் இருந்து அலை இன்றி அமைதியாக காணப்பட்ட கன்னியாகுமரி கடல் 20 அடி உள்வாங்கியது.
இன்றும் இதே நிலை தொடர்ந்தது. இதனால் முக்கடல் சங்கமம், மற்றும் கன்னியாகுமரியின் பிற கடற்கரை பகுதிகள் எங்கும் கடற்கரையில் உள்ள பாசிபடர்ந்த பாறாங்கற்கள் வெளியே தெரிந்தன.
இதைத்தொடர்ந்து எந்நேரத்திலும் அலைகள் பெரிதாக எழுந்து கடல் சீற்றம் ஏற்படுமோ? என கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர்.
கன்னியாகுமரி, குளச்சல், முட்டம், வள்ளவிளை, தூத்தூர், நீரோடி, ராஜாக்கமங்கலம், ராமன்துறை, அழிக்கால், பள்ளம் போன்ற கடலோர கிராமங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேரிடம் மீட்பு குழுவினர் பொதுமக்களை வெளியே வரவேண்டாம் என எச்சரித்தனர்.
குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் பொது இடங்களில் மக்கள் வருவதையும், சாலைகளில் வாகனங்களில் செல்வதையும் தவிர்த்தனர்.
தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர், போலீஸார் கடற்கரை கிராமங்கள் மட்டுமின்றி கீரிப்பாறை, குலசேகரம், பேச்சிப்பாறை போன்ற மலையார பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கன்னியாகுமரி சுற்றுலா மையங்கள், குழித்துறை தாமிரபரணி ஆறு, மற்றும் தாழ்வான பகுதிகளில் மக்கள் கூடவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு இன்றும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.