‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அக்டோபர் 7 முதல் 18-ம் தேதி வரை 2-வது கட்ட பயணம் மேற்கொள்கிறார்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 20-ம் தேதி நாகர்கோவிலில் தனது முதல்கட்ட பயணத்தை தொடங்கிய அவர், திருச்சியில் நாளை (2-ம் தேதி) நிறைவு செய்கிறார். இந்தப் பயணத்தின்போது சட்டப்பேரவை தொகுதி வாரியாக சென்று மக்களைச் சந்திக்கும் அவர், வழக்கத்துக்கு மாறாக விதவிதமான ஆடைகளுடன் வித்தியாசமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
சாலையோர கடைகளில் டீ குடிப்பது, ஆட்டோக்களில் பயணம் செய்வது, பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து உரையாடுவது, மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருடன் தனித்தனியாக கலந்துரை யாடுவது என பயணத்தை தொடர்கிறார்.
இந்நிலையில், ஸ்டாலினின் 2-வது கட்ட நமக்கு நாமே பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
அழிவுப் பாதையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க திமுக தலைவர் கருணாநிதியின் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ மேற்கொண்டுள்ளார். நாகர்கோவிலில் தொடங்கிய அவரது பயணத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பு கிடைத்து வரு கிறது.
அவர் தனது 2-வது கட்ட விடியல் மீட்புப் பயணத்தை அக்டோபர் 7-ம் தேதி நீலகிரியில் தொடங்கி 18-ம் தேதி கடலூரில் நிறைவு செய்கிறார். அக்டோபர் 8 - கோவை புறநகர், 9 - கோவை மாநகர், 10 - ஈரோடு, 11 - திருப்பூர், 12 - கரூர், 13 - நாமக்கல், 14 - பெரம்பலூர், அரியலூர், 15 - தஞ்சாவூர், 16 - திருவாரூர், 17 - நாகை, 18 கடலூர் ஆகிய மாவட்டங்களில் பயணம் செய்கிறார்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்தப் பயணத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.