தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை விமான நிலையத்தின் உட்புற பாதுகாப்பு முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் வசம் உள்ளது. நேற்று பன்னாட்டு முனையத்தின் 14-வது எண் நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை சேர்ந்த கான்ஸ்டபிள்

புலக் ராஜ்பாங்ஸி(27) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். மதியம் 1.45 மணியளவில் விமான நிலையத்தின் குளியல் அறைக்கு சென்றார் புலக் ராஜ்பாங்ஸி. சிறிது நேரத்தில் அங்கிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அருகே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்து குளியல் அறைக்குள் ஓடிச் சென்றனர்.

அங்கே தலையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் புலக் ராஜ்பாங்ஸி இறந்து கிடந்தார். அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. விமான நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் நெருக்கடியா?

விமான நிலைய போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. உயர் அதிகாரிகளின் நெருக்கடி போன்ற வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு ‘செல்ப் லோடிங் ரைபிள்’ (எஸ்எல்ஆர்) என்ற அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இதை குறைந்த தூரத்தில் வைத்து சுட்டதால் புலக் ராஜ்பாங்ஸி தலையின் பெரும் பகுதி சிதறிவிட்டது.

SCROLL FOR NEXT