தமிழகம்

2ஜி விவகாரத்தில் ஏன் நீதிமன்றத்தில் விவாதிக்கவில்லை?- ஆ.ராசா சவாலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி

எஸ்.கோமதி விநாயகம்

2ஜி விவகாரத்தில் ஆ.ராசா ஏன் நீதிமன்றத்தில் விவாதிக்கவில்லை. அன்றைக்கே நீதிமன்றத்தில் விவாதித்திருந்தால் அவரும், கனிமொழியும் சிறை சென்றதைத் தவிர்த்திருக்கலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கயத்தாறு அருகே கடம்பூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதன் காரணமாக பெய்யும் மழையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளன.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தான் காலம் காலமாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக அவர்களாக அந்த அமைப்பில் இருந்து ஒன்றிரண்டு பேர் சங்கத்தைத் தோற்றுவிப்பதற்கு, அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்றால் தற்போது வெற்றி பெற்றிருப்பவர்கள் தான்.

2ஜி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். சிபிஐ, அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்துள்ளது. அங்கே போய் ஆ.ராசா விவாதித்து வெளியே வந்தால் நல்லது. வெளியே வர முடியாது என ராசாவுக்கு தெரியும். இங்கே விவாதிக்கத் தயாரா என கூறுபவர், அன்றைக்கே நீதிமன்றத்தில் விவாதித்திருந்தால் அவரும், கனிமொழியும் சிறை சென்றதைத் தவிர்த்திருக்கலாம்.

நீதிமன்றம் யாரையும் தவறாக சிறைக்கு அனுப்பமாட்டார்கள். அவர்கள் தற்போது தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் மேல்முறையீட்டில் என்ன நிலைமை வரும் என அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றாகத் தெரியும். அரசியலுக்காக முதல்வருக்கு சவுடால் விடுபவர், அந்த வழக்கில் இருந்து விடுபட்டு வரட்டும் பார்க்கலாம்.

வேளாண் சட்டங்கள் பற்றி தமிழக முதல்வர் தெளிவாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதில், ஒரு விவசாயி கூட பாதிக்கப்படவில்லையென முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்கத் தேவையில்லை. இந்த வேளாண் பாதுகாப்புச் சட்டம், உண்மையிலேயே தமிழகத்தைப் பொறுத்தவரையில் வேளாண் குடிமக்களுக்கு பாதுகாப்பாக உள்ளது என்பது தான் எங்களது கருத்து.

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜன.13-ம் தேதி வெளியிடப்போவதாக அந்த படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒ.டி.டி. போன்ற தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது உகந்தது அல்ல என நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.

கரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால், ஓ.டி.டி.என்பது தற்காலிக ஏற்பாடு. இது நிரந்தரமாக இருக்கக் கூடாது என கூறியிருந்தேன். எனது கருத்தை ஏற்று மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என படக்குழுவினர் சொன்னதற்கு நடிகர் விஜய், தயாரிப்புக்குழுவுக்கு நன்றி. அவர்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் அரசு பரிசீலிக்கும், என்றார்.

SCROLL FOR NEXT