கடலூர் அருகே ஈச்சங்காடு பகுதியில் தேங்கியுள்ள மழை தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு அதனை வெளியேற்ற உத்தரவிட்டார். 
தமிழகம்

கொட்டும் மழையிலும் பாதிப்புகளை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட ஆட்சியர்

க.ரமேஷ்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, கொட்டும் மழையில் மழை பாதிப்புகளையும் மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கடலூர் நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவது குறித்து இன்று (டிச. 4) கடலூர் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நகராட்சி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, ''கடலூர் மாவட்டத்தில் தற்போது அதிக கனமழை பெய்து வருகிறது. அதனடிப்படையில் கடலூர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து பாதுகாப்பு மையங்களையும் பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக உடனடியாகத் திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து உடனடியாக பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடிகால் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படாமல் மழைநீர் தங்குதடையின்றிச் செல்வதைக் கண்காணிக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் கொண்டு தற்காலிக வடிகால் ஏற்படுத்தி உடனடியாக வெளியேற்ற வேண்டும்" என்றார்.

பின்னர் அவர் கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குடிகாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு பகுதியில் கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதைப் பார்வையிட்டு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஜேசிபி இயந்திரம் மூலம் மழைநீரினை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரியைப் பார்வையிட்டார். குறிஞ்சிப்பாடியில் சாலையில் வழிந்தோடிய மழை தண்ணீரை ஜேசிபி மூலம் அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வடலூர் அருகே ஆண்டிக்குப்பத்தில் தேங்கி நின்ற மழை நீரையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் மேல்பரவனாற்றுப் பகுதியைப் பார்வையிட்டார். தொடர்ந்து வீராணம் ஏரிக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT