வடலூர் அருகே ரயில்வே கிராஸிங் அருகே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். 
தமிழகம்

விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கும் மழைநீர்: விக்கிரவாண்டி-தஞ்சை சாலை துண்டிப்பு

ந.முருகவேல்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாகத் தொடர்ந்து இடைவெளியின்றி மிதமான மழை பெய்துவருகிறது. மாவட்டத்தில் நேற்று (டிச.3) சராசரியாக 30 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், சிதம்பரத்தில் அதிகபட்சமாக 34 செ.மீ. மழை பெய்துள்ளது.

மழை தொடர்ந்து பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வீராணம் ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. பெருமாள் ஏரியிலிருந்து விநாடிக்கு 9,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், 25 கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் தேங்க வழியில்லாததால், வடிநீர் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வடலூரை அடுத்த மருவாய் பகுதியில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், விக்கிரவாண்டி-தஞ்சை இடையேயான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

வடலூர் ரயில்வே கிராஸிங் அருகே வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலையிலேயே தேங்கி நிற்பதால் அவ்வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT