படம்: எல்.சீனிவாசன் 
தமிழகம்

சென்னையில் விடிய விடிய கனமழை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

செய்திப்பிரிவு

புரெவி புயல் மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருப்பதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் விடிய விடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

புரெவி புயல் நிலை கொண்டுள்ள நிலையில், பெரிய அளவில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஒட்டுமொத்தமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும். தமிழகம் முழுக்க இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று சென்னையில் நல்ல மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சென்னையில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கிய நிலையில் அதிகாலை முதல் பரவலாக கனமழை சென்னை முழுவதும் பெய்தது.

இதனால் சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. கே.கே.நகர், மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, அண்ணா சாலை, வடசென்னையின் பெரும்பாலான பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் ஜி.எஸ்.டி சாலை, கத்திப்பாரா, தென் பகுதியில் வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

இதனால் காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக சிரமப்பட்டனர். சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் 6 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT