கடும் மழையையும் பொருட்படுத்தாமல் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன், பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் புரெவி புயலால் கடந்த 2 நாட்களாக விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை பெய்துள்ளது. அண்ணாமலை நகரில் 32.94 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதனால் சிதம்பரம் பகுதியில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளது. சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள நகர்ப் பகுதிகளிலும் அதிக அளவில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அண்ணாமலை நகர் பகுதி, வல்லம்படுகை, சிதம்பரம் இந்திரா நகர், ஓமக்குளம் பகுதி, மின்நகர் பகுதி, பைசல் மஹால் பின்புறம் நகர்ப் பகுதி மற்றும் 1-வது வார்டு உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
இந்த நிலையில், சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் இன்று (டிச.4) காலை மழையால் தண்ணீர் சூழ்ந்துள்ள அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ள குளம் பகுதியில் உள்ள பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அரசு நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ பாண்டியன் சிதம்பரம் மின்நகர் பகுதி, ஓமக்குளம் பகுதி, அம்மாபேட்டை பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.