உயிரிழந்த முதிய தம்பதி. 
தமிழகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கன மழையில் சுவர் இடிந்து விழுந்து முதிய தம்பதி உயிரிழப்பு: மாவட்டம் முழுவதும் 25 வீடுகள் சுவர் இடிந்து சேதம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக நேற்று (3-ம் தேதி) காலை முதல் இரவு வரை இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதில் ஒரத்தநாடு பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த 300 ஏக்கர் சம்பா நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மழையின் காரணமாக மல்லிப்பட்டினம், மனோரா, அதிராம்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இன்று (டிச.4) காலை வரை காணப்பட்டது. மேலும், மனோரா பகுதியில் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் கலங்கரை விளக்கம் வரை உட்புகுந்தது.

மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 12 வீடுகளும், திருவையாறு பகுதியில் 8 வீடுகளும், கும்பகோணத்தில் 3 வீடுகளும், பேராவூரணி பகுதியில் 2 வீடுகளும் என மொத்தம் 25 வீடுகள் இடிந்தன.

வீடு இடிந்து விழுந்து சேதம்.

இதற்கிடையில் கும்பகோணம் எலுமிச்சங்காபாளையம் சிவஜோதி நகரைச் சேர்ந்த குப்புசாமி (70), இவரது மனைவி யசோதா (65) இருவரும் மண்சுவரால் ஆன அவர்களது ஓட்டு வீட்டில் 3-ம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது 4-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் வீட்டின் கூரையும், சுவரும் இடிந்து இருவர் மீதும் விழுந்ததில் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து, கும்பகோணம் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை மழை சிறிது ஓய்ந்துள்ளதால், அதனைப் பயன்படுத்தி மழை நீர் தேங்கிய இடங்களில் மழைநீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகளும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐராவதீஸ்வரர் கோயிலில் சூழ்ந்துள்ள மழை நீர்.

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் மழை நீர் கோயிலைச் சுற்றிலும் தேங்கியுள்ளது. இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மழைநீரை வடியவைக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT