இந்தியாவிலேயே 2-வது சிறந்தகாவல் நிலையமாக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. இதையடுத்து, முதல்வர் பழனிசாமியிடம் கோப்பையை வழங்கி சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.
மத்திய அரசு கடந்த 2016-ம்ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 காவல் நிலையங்களைத் தோ்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆா்வம் காட்டுதல், குற்றப் பதிவேடுகளை கணினி மூலம் பராமரித்தல், பொதுமக்களை வரவேற்கும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது
2020-க்கான விருது
கடந்த 2017-ம் ஆண்டில் கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையமும், 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையமும், 2019-ம் ஆண்டு தேனி அனைத்து மகளிர் காவல் நிலையமும் இந்த விருதை பெற்றன. தற்போது, சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் நாட்டின் 2-வது சிறந்த காவல் நிலையமாக தேர்வு பெற்று விருது பெற்றுள்ளது.
இதனிடையே, சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கிடைத்த விருது மற்றும் கோப்பையை சேலம் வந்த முதல்வர் பழனிசாமியிடம் வழங்கி, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர்கள் சந்திரசேகரன், செந்தில், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி, உதவி ஆய்வாளர்கள் உமா ராணி, ஜெரீனா பீவி உள்ளிட்டோர் வாழ்த்து பெற்றனர்.
சிறப்பான செயல்பாடு
சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பதால், இங்கு கணவன்- மனைவி ஆகியோருக்கு இடையிலான பிரச்சினைகளே வழக்குகளாக கொண்டு வரப்படும். அவர்களின் குடும்ப நலன், குழந்தைகள் நலன் கருதி, கணவன்- மனைவிக்கு கவுன்சலிங் கொடுத்து, இருவருக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த, இந்த காவல் நிலையத்தில் செயல்பட்டு வரும் 2 நெறியாளர்களைக் கொண்ட கவுன்சலிங் பிரிவின் மூலம் பல தம்பதிகளுக்கு மீண்டும் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான பிரச்சினைகள், பாலியல் தொடர்பான போக்ஸோ வழக்குகள் போன்றவை கையாளப்படுவதால், குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படாமல் இருக்க, விளையாட்டு உபகரணங்கள், ஓவியங்கள் நிறைந்த சைல்டு லைன் கேர் என்ற பிரிவும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.
மகளிர் விழிப்புணர்வு
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 18 வயதுக்கு முன்னரே காதல், திருமணம், பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க, காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில், போக்ஸோ வழகுத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
புகார்தாரரிடம் வரவேற்பாளர்கள் மூலம் முறையாக மனு பெறுதல், அவர்களுக்கான வசதிகள், குடிநீர், சுற்றுப்புறத் தூய்மை, கழிவறை வசதி உள்ளிட்டவற்றை முறையாக பராமரித்தல் போன்றவற்றின் அடிப்படையிலும், புகார் மனு அளித்தவர்களிடம் போலீஸாரின் செயல்பாடு குறித்தும், விருது குழுவினரால் கருத்து கேட்கப்பட்டுள்ளது..