திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சி பகுதியில்846 ஏக்கரில் தொழில்பூங்கா அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள், திட்ட அலுவலர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக நிலம் கையகப்படுத்தப்படும் தத்தனூர், புலிப்பார், பாப்பாங்குளம், புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம் ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாய அமைப்புகளும், அதன் நிர்வாகிகளும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாரதிய கிஷான் சங்க மாவட்ட தலைவரும், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போரட்டக் குழு ஒருங்கிணைப்பாளருமான எம்.வேலுசாமி, ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, "அவிநாசி மற்றும் அவிநாசி தாலுகாவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலங்களை வைத்து விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். ஆழ்குழாய்களை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்த நிலையில், அவற்றிலும் போதிய தண்ணீர் இல்லாமல், பலர் விவசாயத்தை கைவிட்டு மாற்று வேலைகளை தேடிச் சென்றனர்.
இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் பாசன திட்டமானது நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை இணைக்க குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், எங்கள் பகுதிகளில் வறண்ட நிலங்களின் நீராதாரங்களாக உள்ள குளம், குட்டைகளுக்கு விரைவில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விவசாய தொழிலை சிறப்பாக செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த பல விவசாயிகளுக்கு, தற்போது தொழில் பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்துதல் என்பது சோகமான விஷயமாக உருவாகியுள்ளது.
நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகள் பெரும்பாலானவை சிறு,குறு விவசாயிகளுக்கானவை. அரசு திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்திக்கொண்டால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இதுபோன்ற திட்டங்களை, அரசுக்குரிய நிலங்களில் கொண்டுவர வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு 5 மடங்கு இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்து வழங்கினாலும், நிலத்தை அளிக்க யாரும் தயாராக இல்லை. விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இத்திட்டத்தை அரசு கைவிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்றார்.