புதுச்சேரியில் பெய்து வரும் மழை காரணமாக 48 ஏரிகள் முழுயைாக நிரம்பி உள்ளன. பெரிய ஏரிகளான ஊசுடு ஏரி, பாகூர் ஏரி வேகமாக நிரம்பி வருகின்றன.
புதுச்சேரியின் ஆண்டு சராசரி மழையளவு 1,200 மி.மீ ஆகும். நடப்பாண்டை பொறுத்தவரை பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் 1,126 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தில் 328.20 மி.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த நவம்பர் மாதம் முழுவதும் 512.40 மி.மீ மழை பெய்துள்ளது. நிவர் புயலால் ஒரே நாளில் 30 செ.மீ மழை பொழிவு பதிவானது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான 'புரெவி' புயல் காரணமாக புதுச்சேரி முழுவதும் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை புதுச்சேரி பகுதியில் 70 மி.மீ., திருக்கனூர் பகுதியில் 73 மி.மீ., பத்துக்கண்ணு பகுதியில் 56 மீ.மீ., பாகூர் பகுதியில் 63 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதுச்சேரியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
புதுச்சேரியில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. இவற்றில் நேற்றைய நிலவரப்படி காட்டேரிக்குப்பம் ஏரி, சுத்துக்கேணி பெரிய ஏரி, தொண்டமாநத்தம் வெள்ளேரி மற்றும் கடப்பேரி, முருங்கப்பாக்கம் ஏரி, ஒழந்தை ஏரி, அபிஷேகப்பாக்கம் ஏரி, மணமேடு ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி, உச்சிமேடு ஏரி, மேல்பரிக்கல்பட்டு ஏரி, அரங்கனூர் ஏரி, கணகன் ஏரி, வேல்ராம்பட்டு ஏரி உள்ளிட்ட 48 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
குறிப்பாக, புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுட்டேரியில் 3.50 மீட்டரில், 2.55 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரியின் உயரம் 3.60 மீட்டரில், 2.24 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும், கொம்மந்தான்மேடு, பிள்ளையார்குப்பம், சுத்துக்கேணி உள்ளிட்ட படுகை அணைகளும், சித்தேரி அணைக்கட்டு போன்றவைகளும் நிரம்பி வழிகின்றன.
தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழியும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.