கடந்த சில நாட்களுக்கு முன், விழுப்புரம் ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கரும்பு மற்றும் நெல் பயிர்களில் எலி தாக்குதல் இந்த ஆண்டு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதன் மூலம் மகசூல் இழப்பு ஏற்படு வதற்கு வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் அறிவுரைப்படி அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் உதவி இயக்குநர்கள் தலைமையில் விவசாயிகள் முன்னிலையில் எலி ஒழிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்று முன்தினம் வானூர் அருகே வில்வநத்தம் மற்றும் தைலாபுரம் கிராமங்களில் எலி ஒழிப்பு முகாம் நடத்தப்பட்டது, இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு எலி ஒழிப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், நெற்பயிர் சாகுபடி செய்யும் போது வரிசை நடவு மேற்கொள்ள வேண்டும்; கோடை காலங்களில் வரப்புகளை வெட்டி. எலி மற்றும் எலி வலைகளை அழிக்க வேண்டும்; எலிகளுக்கு மறைவிடம் தரும் களைச் செடிகளை அழிக்க வேண்டும்; எலிகளின் எதிரிகளான ஆந்தைகள். கோட்டான்கள் அமர்வதற்கு எலித் தாங்கிகளை அமைக்க வேண்டும்;இதுதவிர, சாணம் கலந்த தண்ணீர் பானையை புதைத்து எலிகளை கவர்ந்து அழிக்கலாம்; ஏக்கருக்கு 25 என்ற அளவில் தஞ்சாவூர் கிட்டிகள் வைத்து எலிகளை அழிக்கலாம் உள்ளிட்ட வழிமுறைகள் அடங்கிய துண்டறிக்கைகள் விவசாயிகள் இடையே விநியோகம் செய்யப் பட்டது.