தமிழகம்

பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகர்வரை உள்ள உடைந்த பாலத்தை கார்கள் போகும் வகையில் கட்டலாம்: உயர் நீதிமன்றம் யோசனை 

செய்திப்பிரிவு


சென்னை பட்டினம்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரை இருந்த 'உடைந்த பாலத்தை' (ப்ரோக்கன் பிரிட்ஜ்) மீண்டும் கட்டும்போது கார்கள் போகும் வகையில் கட்டலாம் என உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரை பொதுமக்கள் பார்வைக்கு எப்போது திறக்கப்படும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால், தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி வரும் 14-ம் தேதி முதல் மெரினா உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடற்கரைகளும் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என தெரிவித்தார்.

அதே போல, மெரினா கடற்கரையில் இருந்த பழைய கடைகளை அகற்றிவிட்டு புதிதாக அமைக்கப்படவுள்ள 900 தள்ளுவண்டிகளுக்கான டெண்டர் 17 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஏக்வார்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சம் 6 மாதத்துக்குள் அக்கடைகள் தயாராகும் எனத் தெரிவித்தார்.

மீன் மார்க்கெட் 1 கோடியே 80 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடற்கரையை ஒட்டிய லூப் சாலை இடதுபுறம் நடைபாதை அமைப்பது மற்றும் மீனவர்கள் கடற்கரையிலிருந்து இடையூறின்றி மீன் மார்க்கெட்க்கு செல்ல நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாகவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.

சாந்தோம் பெசன்ட் நகர் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் ஏற்கனவே இருந்த பட்டினம்பாக்கம் முதல் பெசண்ட் நகர் வரையிலான உடைந்த பாலத்தை மீண்டும் கட்ட 411 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதற்கு மாற்றாக பாதசாரிகள் மற்றும் சைக்கிள் மட்டும் செல்லும் வகையில் 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க 229 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஏ.எல் சிஷ்டம்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மெரினாவில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பு தொடர்பான ஏலத்தில் தாங்கள் பங்கேற்ற போதும், சில நடைமுறை சிக்கல்களால் ஏலத்தை எடுக்க முடியாமல் போனதாகவும், தாங்கள் தான் தமிழகத்தில் முதன் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய தள்ளு வண்டி கடைகளின் உற்பத்தியை தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டரை ஏற்கனவே ஏலத்தில் எடுத்த நிறுவனத்துக்கும், தற்போது நீதிமன்றத்தில் முறையிட்ட நிறுவனத்திற்கும் சரி சமமாக பிடித்துக் கொடுக்கலாமா என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, பிரித்துக் கொடுக்கும் பட்சத்தில் விரைவாக கடைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதால் இது தொடர்பாக நாளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

சாந்தோம் மற்றும் அடையாறு பகுதியை இணைக்கும் பாலத்தை மறுசீரமைப்பு செய்வதை பொருத்தவரை, வாகன நெரிசல் குறைய வேண்டுமென்றால் கார்களும் பயணிக்கும் வகையிலான திட்டத்தை அமல் படுத்துவது தான் சிறந்தது என தெரிவித்தார்.

தொடர்ந்து, மீன் மார்க்கெட் அமைப்பது, கடற்கரையோரம் லூப் சாலையை ஒட்டி நடை பாதை அமைப்பது, மீனவர்களுக்கு நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பான அடுத்த கட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT