மதுரை மேலமடை சந்திப்பில் உள்ள அகலப்படுத்தப்படாத குறுகலான பாலத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு லேக்வியூ சாலையில் நீண்டதூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
மதுரையில் தற்போது போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள், பறக்கும் பாலங்கள் அமைக்கப்படுகிறது. ஆனால் பெரியார் மற்றும் கோரிப்பாளையம் சந்திப்புகளுக்கு அடுத்து போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக உள்ள கே.கே.நகர் - மேலமடை சந்திப்பில் தற்போது வரை மேம்பாலம் அமைக்கப்படவில்லை.
இப்பகுதியில் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இருந்து அண்ணாநகர் செல்லும் லேக் வியூ 80 அடி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செல்லும் சிவகங்கை சாலை, அண்ணா நகரில்இருந்து மாட்டுத்தாவணி செல்லும் சாலை ஆகிய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் சந்திக்கின்றன. மேலமடை சிக்னலில் வண்டியூர் கண்மாயையொட்டி மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிலிருந்து செல்லும் லேக்வியூ 80 அடி சாலையில் உள்ள தரைமட்ட பாலம் மிகவும் குறுகலாக உள்ளது.
இதற்கு எதிர்புறம் இதேபோன்று குறுகலாக இருந்த பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டதுடன்,ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு விசாலமாக உள்ளது. ஆனால் மாட்டுத்தாவணியிலிருந்து கோமதிபுரம் செல்லும் பகுதி இன்னும் அகலப்படுத்தப்படாமல் மிகவும் குறுலாக உள்ளது.
இப்பாலம் அகலப்படுத்தப்பட்டால் மாட்டுத்தாவணி, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோமதிபுரம், சிவகங்கை சாலை நோக்கி செல்வோர் சிக்னலுக்காக காத்திருக்காமல் ‘ப்ரீலெப்ட்’ அடிப்படையில் இடதுபுறமாக செல்ல முடியும்.
இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்க்கலாம். ஆனால் மேலமடை தரைப்பாலம் மிக குறுகலாக உள்ளதால், இடதுபுறம் செல்ல முடியாமல் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் சிக்னல் விழும் வரை லேக் வியூசாலையில் காத்திருக்க வேண்டிவுள்ளது.
சிக்னல் போட்டதும், சிவகங்கை சாலை, கோமதிபுரம் செல்வோரும், அண்ணாநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வோரும் ஒரே நேரத்தில் செல்ல முயல்வதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
அதற்குள் அடுத்த சிக்னல் விழுந்து விடுவதால் கே.கே.நகர் லேக்வியூ சாலையில் நிரந்தரமாகவே பல கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கள் கூட இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் திணறுகின்றன.
இப்பகுதியின் ஒட்டுமொத்த நெரிசலுக்கு காரணமான மேலமடை தரைப்பாலத்தை 80 அடி சாலைக்கு தகுந்தவாறு விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கு தேவையான காலி இடமும் இப்பகுதியில் உள்ளது.
ஆனால் இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் செய்யாததால் தற்போது வரை இப்பகுதியில் தினமும் காலை தொடங்கி இரவு வரை போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
அதேபோல் சிவகங்கை சாலைக்கு செல்லும் பகுதியில் மிக குறுலாக சாலை உள்ளது. இப்பகுதயில் இடதுபுறம் வண்டியூர் கண்மாய்க்கு சொந்தமான இடம் உள்ளது. அப்பகுதியை பொதுப்பணித் துறையிடம் கேட்டுப் பெற்று சாலையை அகலப்படுத்தலாம்.
இப்பகுதியில் தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு கண்மாயைக் கடந்துசெல்ல தரைப்பாலம் அமைக்க அனுமதி வழங்கிய அரசு இயந்திரம், பொதுமக்கள் நலனுக்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேலமடை சந்திப்பில் தரைப்பாலத்தை விரிவுப்படுத்தாமல் அலட்சியம் காட்டுகிறது.
இதேபோன்று கோமதிபுரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணாநகர் நோக்கி திரும்பிச் செல்ல வேண்டிய பகுதியில் இடையூறாக உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறையை வேறு இடத்தில் மாற்றி அமைத்தால், அச்சாலையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திராமல் “ப்ரீ லெஃப்ட்” முறையில் செல்ல முடியும்.
இதன் மூலம் இச்சந்திப்பின் பெரும்பகுதி போக்குவரத்து நெரிசலை குறைத்து விடலாம்.