புரெவி புயலால் சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது.
சென்னை - ராமேசுவரம் இடையே தினசரி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் சென்னையிலிருந்து இன்று ராமேசுவரத்துக்கு புறப்பட்டு வந்தது.
ரயிலில் ராமேசுவரத்துக்கு செல்வதற்காக 111 பயணிகளுக்கும் மேல் இருந்தனர். புரெவி புயலானது இலங்கை திரிகோணமலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் கரை கடந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகப் பகுதி நோக்கி வந்ததை அடுத்து மாவட்டம் முழுதும் பலத்த மழை பெய்தது.
இன்று அதிகாலையில் ராமேசுவரம், பாம்பன், ராமநாதபுரம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்றும் வீசியது. அதனால் ராமநாதபுரத்துக்கு அதிகாலை 3 மணிக்கு வந்த விரைவு ரயிலானது தொடர்ந்து செல்ல முடியாத நிலையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்திலேயே
நிறுத்தப்பட்டது.
ராமேசுவரம் செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் 3 பேருந்துகள் மூலம் மண்டபம், ராமேசுவரம் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விரைவு ரயிலானது மறு அறிவிப்பு வரும் வரையில் ராமநாதபுரத்திலிருந்தே சென்னைக்கு புறப்படும் என ரயில்வே நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.