ரஜினி அரசியல் வருகையை வரவேற்கிறோம். வருங்காலங்களில். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பிருந்தால் கூட்டணி அமைப்போம் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 2021 ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து இன்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது அரசியல் வருகைக்குப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வீரபாண்டி அருகே உள்ள நட்பு கொண்டு பகுதியில் அமைய இருக்கும் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இடத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.
பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். அவரது வரவு நல்வரவாக அமையட்டும்" எனத் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைப்பீர்களாஎன்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், ”எதிர்வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம். வாய்ப்பு இருந்தால் கூட்டணி அமையும்” என தெரிவித்தார்.