திருநள்ளாறு பகுதியில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக் கடலில் உருவான புரெவி புயலால் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, வரிச்சிக்குடி, திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விட்டு விட்டுக் காற்றுடன் கனமழை பெய்தது. நள்ளிரவுக்குப் பின்னர் சில இடங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் திருநள்ளாறு பகுதியில் சில தாழ்வான இடங்களிலும், குடியிருப்புப் பகுதியிலும் மழை நீர் தேங்கியது.
இந்நிலையில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், இன்று (டிச.3) திருநள்ளாறு அரங்கநகர், அத்திப்படுகை, கருக்கங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்களைச் சந்தித்துப் பேசி பாதிப்புகள், தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
குடியிருப்பு மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணியை உடனடியாக மேற்கொள்ளுமாறு திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை அறிவுறுத்தினார்.