கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள அவரது ரசிகர்கள், இனி எந்தக் கட்சியும் நிம்மதியாகத் தூங்க முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்துப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு, எதிர்க் கருத்துகளைக் கூறி வந்தனர். குறிப்பாக, அவர் கட்சி தொடங்குவதில் ஆண்டுக்கணக்கில் செய்யும் காலதாமதத்தை விமர்சித்தும், கேலி செய்தும் சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பரவின. ஒரு தரப்பினரோ, தான் நடிக்கும் படங்களை வெற்றியடையச் செய்யும் உத்தியாக கட்சி தொடங்கும் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் கையாள்வதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்தச் சூழலில், அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாகவும், நிர்வாகிகள் சிலரை நியமித்தும் நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இதையடுத்து, திருச்சியில் இடைவிடாத மழையிலும் தில்லை நகர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
தில்லை நகரில் ரஜினி மக்கள் மன்ற மாநகரச் செயலாளர் எஸ்விஆர்.ரவிசங்கர் தலைமையிலும், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் பகுதிச் செயலாளர் ரமேஷ் தலைமையிலும் இந்தக் கொண்டாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ரவிசங்கர் கூறும்போது, “கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை எங்களுக்குத் தந்துள்ளது. இதுகுறித்து இதுவரை ஏளனம் செய்து வந்த அனைவருக்கும் தலைவர் ரஜினிகாந்த் பதில் கொடுத்துள்ளார். அவர் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
இனி எந்தக் கட்சியும் நிம்மதியாகத் தூங்க முடியாது. பூத் ஏஜெண்ட் நியமனம் உட்பட பல்வேறு தேர்தல் பணிகளை நாங்கள் ஏற்கெனவே முடித்து வைத்துள்ளோம்" என்றார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.சதீஸ்குமார் கூறும்போது, “ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து இதுவரை ஏளனம் செய்தவர்களுக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. அவருக்கு அனைத்துத் தரப்பினரிடத்திலும் பெரிய ஆதரவு உள்ளது. எனவே, அவர் கைகாட்டும் திசையில் செயல்பட்டு, தேர்தலில் வெற்றி பெறுவோம்" என்றார்.