வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, வரிச்சிக்குடி, திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விட்டு விட்டு காற்றுடன் கனமழை பெய்தது. நள்ளிரவுக்குப் பின்னர் சில இடங்களில் பலத்த காற்று வீசியது.
திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், சில குடியிருப்புப் பகுதிகளிலும், பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும் நீர் தேங்கிக் காணப்பட்டது. திருநள்ளாறு அரங்கநகரில் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்தன. நீர் தேங்கிய பகுதிகளிலிருந்து மழை நீரை வெளியேற்றும் பணிகளும், விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. காரைக்காலில் இன்று காலை 8.30 மணி வரை 164.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மண்டபத்தூர், கிளிஞ்சல்மேடு, அக்கம் பேட்டை, காளிக்குப்பம், திருவேட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களையும், கடலோர மீனவக் கிராமப் பகுதிகளையும், ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளையும் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.