எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் கிருஷ்ணகிரியில் போட்டியிட வேண்டும் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, நாச்சிக்குப்பம் மற்றும் காவேரிப்பட்டணத்தில் பட்டாசுக்கள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் கே.வி.எஸ் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
மாவட்டத் துணைச் செயலாளர்கள் பாபா மாதையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஆர். முத்து, ரஜினி நாகராஜ் , மகளிரணி சுபலட்சுமி, இளைஞரணி அரிஸ், வழக்கறிஞர் அணி கோவிந்தராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின் மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் கூறும்போது, ’’தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி அமைத்திட, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் காக்கவே, ரஜினி கட்சி தொடங்க உள்ளார். ரஜினியின் பூர்வீக மாவட்டமான கிருஷ்ணகிரியில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பேட்டியிட வேண்டும். இதற்காக அயராது உழைக்க நாங்கள் தயாராக உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.