காரைக்காலில் ரேஷன் கடை ஊழியர்களுடன் இன்று (டிச.3) அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை, எவ்வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 70 கூட்டுறவு ரேஷன் கடைகளில் 120 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். புதுச்சேரியில் இலவச அரிசிக்குப் பதிலாக பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டதால் ரேஷன் கடைகள் மூடப்பட்டதோடு, ஊழியர்களின் பணியும் கேள்விக் குறியானது.
இந்நிலையில் கடந்த 38 மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், ரேஷன் கடைகளைத் திறக்க வேண்டும் அல்லது ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய நிதிப் பலன்களை வழங்க வேண்டும், ஊதியமின்றிக் குடும்பத்தை நடத்த இயலாமல் உயிரிழந்த ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து பலகட்டப் போராட்டங்களில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் இன்று ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், மாவட்டத் துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், காரைக்கால் கூட்டுறவு ரேஷன் கடை சங்கத் தலைவர் குமாரசாமி, மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குநர் டி.தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர் போராட்டக்குழுத் தலைவர் ரஹ்மத் பாஷா, செயலாளர் மனோகர் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துப் போராட்டக்குழுச் செயலாளர் மனோகர் கூறும்போது, ’’கரோனா நிவாரணத்துக்காக மத்திய அரசு வழங்கியுள்ள அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் எனவும், அதற்குக் கிலோவுக்கு 70 பைசா கமிஷன் அடிப்படையில் தொகை அளிக்கப்படும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ரேஷன் கடைகளில் இனி எங்களுக்கு வேலை இல்லையெனில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனில், ஊதிய நிலுவையில் 19 மாதங்களுக்கான ஊதியத்தையாவது உடனடியாக வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் அரிசி வழங்கும் பணியை மேற்கொள்வதாகத் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் அதுகுறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.
கரோனா நிவாரணத்துக்காக வந்த அரிசி மூட்டைகள் அரசுப் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆசிரியர்கள் மூலமும், பொதுப்பணித்துறை பல்நோக்குப் பணியாளர்கள் மூலமும் வழங்கப்பட்ட நிலையில் தற்போதும் அதுபோல ஏதாவது நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளுமாறு கூறினோம். பேச்சுவார்த்தையில் எவ்வித சுமுக முடிவும் எட்டப்படவில்லை. அதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்றார்.