கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 7 மணியிலிருந்து கொடைக்கானலில் பேருந்து மற்றும் அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என சார் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து காற்று வீசி வருவதால் மேல்மலை கீழ்மலை கிராமங்களிலும் நகர் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக அனைத்து குடிநீராதாரங்களும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சு்ற்றுலாப்பயணிகள் செல்ல 2-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தொடர்ந்து இன்று மாலை 7 மணியில் இருந்து பேருந்து மற்றும் அனைத்து விதமான வாகனங்களும் மறு அறிவிப்பு வரை நிறுத்தப்படுவதாக சார் ஆட்சியர் சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
பிரதான மலைச்சாலைகளில் அவ்வப்போது சாலையின் குறுக்கே விழுந்து வரும் மரங்களையும் மரக்கிளைகளையும் பேரிடர் மீட்புக்குழுவினர் அகற்றி வருகின்றனர்
மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளிலும், சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதிகளிலும் முடங்கியுள்ளனர். மேலும் மலைப்பகுதி முழுவதும் குளிர் நிலவி வருகின்றது.