புரெவி புயல் முன்னெச்சரிக்கை, கனமழை காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவி வரும் புரெவி புயல், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தென் மாவட்டங்கள் உச்சகட்ட உஷார்நிலையில் உள்ளன. கடலோரப் பகுதிகள், மலையோரங்கள், தாழ்வான பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுவையின் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக இன்று அறிவித்தார்.
புதுவை அரசு கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி பள்ளிகளைத் திறந்தது. கரோனா சூழல் காரணமாக 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் பள்ளிகளுக்கு வரலாம் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.