தமிழகம்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: 12 லட்சம் பேர் பயனடைவார்கள்

செய்திப்பிரிவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்கவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 12 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

இந்தியன் ரயில்வேயில் உள்ள 17 மண்டலங்களில் மொத்தம் 12 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் ஆயுத பூஜையின்போது போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்கவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் அதிகாரிகள் அல்லாத 12 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு ஊழியருக்கும் தலா ரூ.8 ஆயிரத்து 975 கிடைக்கும். இதன்மூலம் மொத்தம் ரூ.1,030 கோடி செலவாகும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் அதிருப்தி

இது தொடர்பாக டிஆர்இயு செயல் தலைவர் ஆர்.இளங் கோவன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ரயில்வே துறையில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். காலியிடங்களை உடனுக்குடன் நிரப்பாததால், ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள் ளது. ஆனால், ஊழியர்களுக்கு கொடுக்கும் போனஸை 5 ஆண்டுகளாக உயர்த்தாமல் உள்ளனர்.

போனஸ் உச்ச வரம்பு தொகையை ரூ.3 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தின்போது கேட்டோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்தது.

ஆனால், அது நிறைவேற்றப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT