தமிழகம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேருக்கு ஜாமீன்: யுவராஜ் விரைவில் சரணடைவார் - மனைவி சுவீதா தகவல்

செய்திப்பிரிவு

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் நேற்று காலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை அழைத்துச் செல்ல யுவராஜின் மனைவி சுவீதா ஆத்தூர் வந்திருந்தார். அவர்களை மாலை அணிவித்து வரவேற்க முயன்றபோது, சிறை வளாகத்தில் மாலை அணிவிக்கக்கூடாது என்று போலீஸார் கூறினர். இதைத்தொடர்ந்து மாலை அணிவிக்காமல் யுவராஜ் மனைவி சுவீதா மற்றும் ஆதரவாளர்கள், அவர்களை அழைத்துச் சென்றனர்.

யுவராஜ் மனைவி சுவீதா கூறும்போது, ‘கோகுல்ராஜ் வழக்கை சிபிசிஐடி போலீஸார் முறையாக விசாரித்து வருகிறார் கள். போலீஸாரால் தேடப்படும் எனது கணவர் யுவராஜ் சரண் அடைய வாய்ப்புள்ளது’ என்றார்.

பின்னர் அவர், ஜாமீனில் விடுதலையான 3 பேருடன் சங்ககிரிக்கு புறப்பட்டுச் சென்றார். அவர்கள் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அங்கு அஞ்சலி செலுத்தி னர். மூவர் விடுதலை செய்யப் பட்டதை அடுத்து, ஆத்தூர் கிளை சிறை முன்பு எஸ்பி சுப்புலட்சுமி, ஆத்தூர் டிஎஸ்பி காசிநாதன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீஷ் மற்றும் பரமத்தி வேலூர் கிளை சிறையில் இருந்த ஸ்ரீதர் ஆகியோரும் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT