வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி பாமக நடத்திவரும் போராட்டத்தில் ஆங்காங்கே நடந்த சாலை மறியல், கல்வீச்சு போன்ற நிகழ்வுகள், 1987-ல் நடந்ததுபோன்ற வன்முறைப் போராட்டப் பாதைக்கு அக்கட்சி திரும்புகிறதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் விடுதலைக்கு பிறகு தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் மிக முக்கியமானது, 1987-ல் வன்னியர் சங்கம் நடத்திய தொடர் சாலை மறியல் போராட்டம்.
எம்ஜிஆர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1980-ல் திண்டிவனத்தில் 28 வன்னியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய டாக்டர் ராமதாஸ்அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து ‘வன்னியர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். 1980-ல் நடந்த வன்னியர் சங்கத்தின் முதல் மாநாட்டில், “தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடும், மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 2 சதவீத இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை வலியுறுத்தி வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 1984-ல் உண்ணாவிரதம், 1985-ல் சென்னையில் பேரணி, 1986-ல் மறியல் என்று ராமதாஸ் தலைமையில் பல போராட்டங்கள் நடந்தன.
அதன் தொடர்ச்சியாக 1987 செப்.17 முதல் 23-ம் தேதி வரை வன்னியர் சங்கம் சார்பில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகளில் அமர்ந்து வன்னியர் சங்கத்தினர் மறியல் செய்தனர். மரங்களை வெட்டி சாலையில் போட்டனர். இதனால் வட மாவட்டங்களில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. போராட்டக்காரர்களால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது கட்சி மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. பின்னாளில் (1995) ‘பசுமைத் தாயகம்’ என்ற சுற்றுச்சூழல் அமைப்பை தொடங்கிய ராமதாஸ், மரங்கள் நடுவதை இயக்கமாக நடத்தி வந்தது நினைவுகூரத்தக்கது.
சாலை மறியலில் ஈடுபட்ட ராமதாஸ் உள்ளிட்ட வன்னியர் சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 1987 செப்.17-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பதற்றம் உருவானது.
அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சென்னை திரும்பியதும் 1987 நவ.25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் வன்னியர் சங்கம் உள்ளிட்ட 94 சாதி சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இதுகுறித்து கடந்த ஜூலை 13-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் நினைவுகூர்ந்த ராமதாஸ், “6 ஆண்டுகளாக எங்களை கண்டுகொள்ளாத அரசு, ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வகையில் மறியல் நடத்தியவுடன் எங்களுடன் பேச்சு நடத்தியது. இதுவே மக்கள் சக்தியின் வலிமை’’ என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஒரு மாதத்துக்குள், அதாவது 1987 டிச.24-ம் தேதி எம்ஜிஆர் காலமானார். 1989-ல் கருணாநிதி முதல்வரானதும் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார்.
தொடர்ந்து 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை ராமதாஸ் தொடங்கினார். 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் வென்று பேரவைக்குள் நுழைந்த பாமக, 1996-ல் 4 தொகுதிகளில் வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1998-ல் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்டு 4 எம்.பி.க்களை பெற்று, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அங்கம் வகித்தது.
பிறகு சட்டப்பேரவை தேர்தல்களில் 2001-ல் அதிமுக கூட்டணியில் 20 இடங்கள், 2006-ல் திமுக கூட்டணியில் 18 இடங்கள், 2011-ல் திமுக கூட்டணியில் 3 இடங்கள் என்றும், மக்களவை தேர்தல்களில் 1999-ல் திமுக, பாஜக கூட்டணியில் 5 இடங்கள், 2004-ல் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் 6 இடங்கள், 2014-ல் பாஜக, தேமுதிக, மதிமுக கூட்டணியில் 1 இடத்திலும் பாமக வெற்றி பெற்றது. 1996-ல் தனித்து 4 தொகுதிகளில் வென்ற பாமகவால், கடந்த 2016 பேரவைத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை.
இந்த சூழலில்தான் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி பாமக மீண்டும் போராட்டத்தை தொடங்கி இருக்கிறது. இதையொட்டி கடந்த 30-ம் தேதி அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், “1987-ல் நாம் நடத்திய ஒருவார தொடர் சாலை மறியல் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. அதற்காக நாம் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் ஏராளமானவை. ஆனால், இப்போது ஒருசில வாரங்களிலேயே அதைவிட கூடுதலான எழுச்சியை ஏற்படுத்தி உள்ளோம். எதற்கும் அஞ்சாமல் டிச.4 வரை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.
அறிவித்தபடி, கடந்த 1-ம் தேதி போராட்டத்தை பாமக தொடங்கியது. சென்னையில் மன்றோ சிலை அருகே நடந்த போராட்டத்தில் ஜி.கே.மணி, அன்புமணி உள்ளிட்டோர் தலைமையில் கட்சியினர் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அதே நேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் இறங்கினர். பெருங்களத்தூரில் நடந்த மறியலால் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து முடங்கியது. தாம்பரம் பகுதியில் சாலையில் கற்களை போட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தடுத்தனர். பெருங்களத்தூரில் பயணிகள் ரயில் மீது போராட்டக்காரர்கள் கல் வீசும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. இதனால், 1987-ல் நிகழ்த்தப்பட்ட வன்முறைப் போராட்ட பாதைக்கு அக்கட்சி திரும்புகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன்மூலம், கூட்டணி அமைப்பது; கூட்டணியில் முக்கியத்துவம் பெறுவது; கூடுதல் இடங்களை பெற அழுத்தம் கொடுப்பது; அதற்கான தேர்தல் அரசியலை தொடங்குவது என தனது தேர்தல் நேர செயல்பாடுகளை பாமக தீவிரப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.