தமிழகம்

யுவராஜிடம் பேட்டி எடுத்த விவகாரம்: தொலைக்காட்சிகள், வார இதழுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

செய்திப்பிரிவு

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த யுவராஜிடம், பேட்டி எடுத்தது குறித்து 3 தனியார் தொலைக்காட்சி மற்றும் வார இதழுக்கும் விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த ஜூன் 24-ம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்குதொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த வழக்கில் தலைமறை வான சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜை, போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜ் சரண் அடைந்தார். இதற்கிடையில், யுவராஜ் தலைமறைவாக இருந்தபோது, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகம் மூலம் அவ்வப்போது பேசி போலீஸ் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்து வந்தார்.

மேலும் சில தனியார் தொலைக்காட்சி மற்றும் வார இதழ் ஒன்றுக்கும் பேட்டி அளித்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதுகுறித்து கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீஸார், யுவராஜ் பேட்டியை ஒளிபரப்பிய 3 தனியார் தொலைக்காட்சி மற்றும் வார இதழுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது, தகவல் எதுவும் கூற மறுத்து விட்டனர்.

யுவராஜ் தலைமறைவாக இருந்தபோது, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகம் மூலம் அவ்வப்போது பேசி போலீஸ் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்து வந்தார்.

SCROLL FOR NEXT