நாராயணசாமி- கோப்புப் படம் 
தமிழகம்

கரோனா தொற்றுடன் ஜிப்மரில் மாவட்ட ஆட்சியர் சேர்ப்பு: லிப்டில் சிக்கிய புதுச்சேரி முதல்வர்

செ. ஞானபிரகாஷ்

மூச்சுத்திணறலால் கரோனா தொற்றுடன் ஜிப்மரில் மாவட்ட ஆட்சியர் அருண் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை விசாரிக்கச்சென்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர், தலைமைச்செயலர் ஆகியோர் சென்ற லிப்ட் பழுதானதால் அவர்கள் அதில் சிக்கினர்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக அருண் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்திருந்தார். அவருக்கு கரோனா தொற்று இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று ஜிப்மர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை தரப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் நலன் தொடர்பாக விசாரிக்க முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,,தலைமைச் செயலர் அஸ்வினி குமார் ஆகியோர் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றனர். அவர்கள் சென்ற லிப்ட் பழுதடைந்ததால் அதில் சிக்கிக்கொண்டதாக ஜிப்மர் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக அரசு மற்றும் அமைச்சர் தரப்பில் விசாரித்தபோது, "சுமார் பத்துநிமிடங்கள் மூவரும் லிப்ட் பழுதால் சிக்கினர். பின்னர் லிப்ட் ஸ்விட்சை தட்டி கீழே இறக்கப்பட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியே வந்தனர். பின்னர் பாதுகாப்பு உடைகளுடன் சென்று அருணை சந்தித்து உடல் நலனை விசாரித்து திரும்பினர்" என்று குறிப்பிட்டனர்.

கரோனா தொற்று காலத்துக்கு பிறகு ஜிப்மர் வளாகத்தினுள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. புற நோயாளிகள் பிரிவுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட மருத்துவமனையில் இருந்து அனுமதி பெற்று குறுந்தகவல் கிடைத்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்ற சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT