மதுரையில் ரூ.1,295 கோடியில் நிறைவேற்றப்படும் முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்க முதல்வர் கே.பழனிசாமி நாளை மாலை மதுரை வருகிறார்.
மதுரை மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடக்க விழா, மதுரை ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா மற்றும் சிவகங்கை மாவட்ட கரோனா தொற்று நோய்த் தடுப்பு ஆய்வுக்கூட்டம் போன்றவை வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் கே.பழனிசாமி நாளை மாலை விமானம் மூலம் மதுரை வருகிறார். இரவு மதுரையில் தங்கும் அவர், மதுரையில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ரூ.1,295 கோடியில் நிறைவேற்றப்படும் பெரியார் கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ரூ.31 கோடியில் கட்டப்பட்ட மதுரை ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்.
மேலும், ரூ38 கோடியில் பல்வேறு நிறைவேற்றப்பட்ட பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பின் சிவகங்கை செல்லும் அவர், மாலையில் அங்கு நடக்கும் கரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மதுரை, சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் கே.பழனிசாமி, இரவு சென்னை செல்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் அவரை வரவேற்று மாநகரச் செயலாளர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்புகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நுழைவுப்பகுதியிலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறப்பு விழா காணும் கூடுதல் கட்டிடம் முன்பும் பிரம்மாண்ட அலங்காரத் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழா ஏற்பாடுகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்பட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.