தமிழகம்

மீண்டும் வீழ்ந்த மதுரை மல்லிகை விலை; விவசாயிகள் கவலை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கடந்த சில வாரமாக ஓரளவு விலை உயர்ந்து காணப்பட்ட மதுரை மல்லிகைப் பூவின் விலை, இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்தது. கிலோ ரூ.600க்கும் கீழ் விற்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் அக்டோபர் வரை பூக்களுக்குச் சந்தைகளில் பெரிய வரவேற்பு இல்லை. கடந்த ஆயுத பூஜை, தீபாவளி நாட்களில் பூக்களின் விலை உயர ஆரம்பித்தது. தீபாவளியில் உச்சமாகக் கிலோ ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்றது. அதன் பிறகும் விலை குறையாமலே விற்றது.

கடந்த ஒரு வாரமாக மதுரையில் அடைமழை பெய்தும் பூக்கள் விலை குறையவில்லை. ஆனால், இன்று முதல் திடீரென்று பூக்களின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.

மதுரை மல்லிகை கிலோ ரூ.600, அரளி ரூ.2,550, பிச்சிப்பூ ரூ.500, முல்லை ரூ.500, சம்பங்கி ரூ.80, செவ்வந்தி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.120, பட்ரோஸ் ரூ.100 என பூக்களின் விலை கணிசமாகக் குறைந்தது. அடுத்த முகூர்த்தம் மற்றும் கிறிஸ்துமஸ் வரும்வரை பூக்கள் விலை குறைய வாய்ப்புள்ளதாகப் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT